தமிழ் என்றொரு நகைச்சுவைத்தமிழன்..

அன்பு உறவுகளே!

இது ஒரு இரங்கற் பா.. எம் தமிழுக்கு..

tamil

tamil

இதுநாள்வரை புலம் பெயர் தமிழர்களின் வாழ்விலே மறக்கமுடியாத ஒரு நகைச்சுவைத்தென்றலாக, இலண்டன் தமிழ் வானொலி ஊடாக, வீசிக்கொண்டிருந்த தமிழ் என்கிற நகைச்சுவை மன்னன் எதிர்பாராத தருணத்தில் எம்மையெல்லாம் மண்ணுலகில் விட்டுவிட்டு விண்ணுலகம் சென்றுவிட்டார். ஒரு கவிஞனாக, பேச்சாளராக, நகைச்சுவை மழை பொழியும் மேகமாக அதையெல்லாம் மீறி ஒரு மனிதனாக எம்மையெல்லாம் ஆட்கொண்ட தமிழே,

ஏன் உனக்கு இத்தனை அவசரம்.

சிரிக்கவும், சிந்திக்கவும் வைக்க மட்டுமல்ல உனக்கு

அழ வைக்கவும் தெரியும் எனக்காட்டவா??

இரண்டு நாளாக எம் கலையகத்தின் தொலைபேசிகள் எல்லாம்

எத்தனை அழுதன தெரியுமா??

இப்போது மகிழ்ச்சியா…உனக்கு?

கல்நெஞ்சக்காரனையா நீ..

காணும் விழிகளெல்லாம் கண்ணீரால் நனைந்த பின்னும்…

இன்னும் கரையலயோ உன் நெஞ்சம்..

மௌனம் கலைத்து எழுந்து வர மாட்டாயா??

மீண்டும் வந்தெம்மை சிரிக்க வைக்க மாட்டாயா??

நீ வரமாட்டாய்…

நீ பெரும் தலைவனுமில்லை..

அரசியல் பிழைத்த அரசியல்வாதியுமில்லை..

இரசிகன் புடை சூழ வலம் வரும் நடிகனுமில்லை..

இவர்களையெல்லாம் விட எத்தனையோ தமிழர்களின் இல்லத்திலே..

இல்லை இல்லை..

உள்ளத்திலே குடிகொண்ட இன்பத்தமிழன் நீ..

இந்த மண்ணை விட்டு மறைந்தாலும்

எம் மனதை விட்டு மறையாத மனிதன் நீ..

அணையா விளக்காய் எம்முள் நீ..

அமுதத்தமிழாய் என்றும் நீ..

இன்று சிந்திய கண்ணீர் துளிகள்

எல்லாம் நீ சிந்திய நகைச்சுவைத் துளிகள்..

இனி வரும் வியாழனெல்லாம்

எங்கே போய்த்தேடுவேன் உன்னை..

ஞாயிறே! உனை எதிர்க்க இனி எமக்கு குளிரில்லை..

திங்களே! உனைப்பார்க்க எனக்குத் திடமில்லை..

வெள்ளியே! உன் சிமிட்டல்கள் எனை மகிழ்விக்காது..

வியாழனே! நீ வராதே.. உனை மகிழ்விக்க எம்மிடம் தமிழில்லை..

நீ வராதே..நீ வராதே…

இலண்டன் தமிழ் வானொலி

இனி

இலண்டன் “தமிழ்” வானொலியாக வலம் வரும்.

என்றும் மீளாத்துயரில்..

அன்புத்தம்பி..

இராசேந்திர உடையார்..

2 பதில்கள்

  1. என் அஞ்சலியையும் தெரிவிக்கின்றேன்.

    நட்புடன்
    ராகினி

  2. கவிதைக்குயிலுக்கு என் இனிய நன்றி.

மறுமொழி இடுக